மன்னார் தமிழ் தேசிய பேரவையின் ஏற்பாட்டில், நேற்றைய தினம்(28.02) அரசியல் தரப்பினர் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் ,
தமிழர்களது இனப்பிரச்சனைக்கு தீர்வாக அரசாங்கம் கொண்டுவரவுள்ள ஏக்ய இராஜ்ய வரைபை நிராகரித்து, அதற்குப் பதிலாக கூட்டாட்சி (சமஸ்டி தீர்வை ஒரேகுரலில் முன்வைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது கஜேந்திரகுமார் எம் பி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘ஏக்கிய ராஜ்ஜிய’ அரசியலமைப்புக்கு எதிராகவும் தமிழ் மக்களுடைய தமிழ் தேசியம் அங்கீகரிக்கப்படுகின்ற, தமிழ் தேசத்திலே தனித்துவமான இறைமை அடிப்படையிலே உருவாக்கப்படுகின்ற சுய நிர்ணய உரிமையை முறையாக அனுபவிக்க கூடிய ஒரு சமஷ்டி யோசனையே தயாரிப்பதற்கான எடுக்கப்பட்ட முயற்சி சம்பந்தமாக பிராந்திய மட்டத்திலேயே செயற்படுகிற பொது அமைப்புக்கள் மற்றும் மாவட்ட ரீதியாக செயற்படுகின்ற பொது அமைப்புகளையும் சந்தித்து கடந்த 15 ஆம் தேதி உருவாக்கப்பட்ட பொது சபைக்குள்ளே உள்வாங்கும் நோக்கில் நாங்கள் மன்னார் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பொது அமைப்புகளை இன்று சந்தித்திருக்கிறோம்.
அந்த வகையில் கடந்த 15 ஆம் திகதி எடுக்கப்பட்ட முடிவுகள் சம்பந்தமாக அவர்களுக்கு தெரியப்படுத்தி அத
எதிர்காலத்திலே நாங்கள் சேர்ந்து செய்ய வேண்டிய வேலை திட்டத்தை விளங்கப்படுத்தி,
குறிப்பாக அரசாங்கம் கொண்டு வர இருக்கின்ற இந்த ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பை மக்களை நிராகரிக்க செய்து, அவர்களின் அபிலாசைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு புதிய ஒரு அரசியலமைப்பு யோசனையை, ஒரு பொது ஆவணம் ஒன்றை தயாரிப்பது சம்பந்தமாக எல்லாருடைய ஒத்துழைப்பையும் நாடி நாங்கள் இன்றைய தினம் இங்கு வந்திருக்கிறோம்.
அந்த வகையில் இன்று இங்கு கலந்து கொண்ட அனைத்து தரப்பினரும் தங்களுடைய முழுமையான ஆதரவினை எங்களுடைய முயற்சிக்கு தந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த மன்னார் மாவட்டத்தை மையப்படுத்தி செயற்பட்டாலும் கூட இந்த பொதுச் சபையில் உறுப்பினர்களாகச் சேர்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.
அந்த வகையிலே இன்று இந்த சந்திப்பு எங்களுக்கு ஒரு நம்பிக்கை தருகின்ற விடயமாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலிலே,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்ட பொறுப்பாளர் துரைராசா ஜோன்சன், பிரதேச சபை உறுப்பினர் எம் .என். நில்மினி மற்றும் மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி மார்க்கஸ் அடிகளார் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் தரப்பினர் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.







