நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கத்தால் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு, தருமபுரம், நாதன் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் தென்னை, வாழை, கமுகு போன்ற பயிர்கள் அழிவடையும் நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பல பகுதிகளில் கிணறுகளிலும் நீர் வற்றியுள்ளதாகவும், இதனால் தோட்டச் செய்கைகளுக்கு தேவையான அளவு நீரைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக, வாழைச் செய்கையை வாழ்வாதாரமாக மேற்கொண்டு வந்த சில விவசாயிகள், போதியளவு நீர் கிடைக்காததன் காரணமாக வறட்சியால் வாழைச் செய்கையை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பல பகுதிகளில் தென்னை மரங்கள் அழிந்து வருவதுடன், கமுகு மரங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டு அழிவடைந்த நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.
கடந்த 16 வருடங்களாக தென்னை உள்ளிட்ட பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டு வந்த போதிலும், இதற்கு முன்னர் இல்லாத வகையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக தமது விவசாய நடவடிக்கைகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, வறட்சியால் ஏற்பட்டுள்ள பயிர் அழிவுகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசாங்கம் ஏதேனும் ஒரு வகையில் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







