மன்னாரில் அனைத்து எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனான அவசர கலந்துரையாடல்

138
0
Spread the love

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தொடர்பில் மன்னார் மாவட்ட செயலாளரின் தலைமையில் அவசர கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

நேற்று( 04.03) புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில்,

பொது மக்களுக்கான எரிபொருள் விநியோகம், விவசாயம் மற்றும் மீன்பிடிக்குத் தேவையான எரிபொருள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்ட செயலாளர் தெரிவிக்கையில்,

வளைகுடா பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள யுத்த நிலைமை காரணமாக வட மாகாணத்திலும் குறிப்பாக மன்னாரிலும் எரிபொருளுக்கு ஒரு தட்டுப்பாடான நிலைமை காணப்படுகிறது. இதனால் நெல் அறுவடை செய்யும் இயந்திர உரிமையாளர்கள் நெல் அறுவடை செய்யும் கட்டணத்தை அதிகரித்துள்ளனர்.அத்தோடு நெல் கொள்வனவிற்கு வருபவர்களும் எரிபொருள் தட்டுப்பாட்டினை காரணம் காட்டி குறைந்த விலையில் நெல்லை கொள்வனவு செய்து வருகின்றனர் எனவே இதனை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிலைய உரிமையாளர்களையும் கமநல உதவி ஆணையாளர் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்,மற்றும் கடல் தொழில் நீரியல் வள திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து ஒரு கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளோம். அதன் போது நாங்கள் சில தீர்மானங்களை எடுத்து உள்ளோம். அதற்கமைவாக பெரும்பாக உத்தியோகத்தரின் சிபாரிசுடன் அறுவடை இயந்திர உரிமையாளர்களுக்கு, நாள் ஒன்றுக்கு 90 லிட்டர் எரிபொருளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அவர்கள் ஏக்கர் ஒன்றுக்கு வளமையாக அறுவிடப்படுகின்ற பணத்தை அறவிட வேண்டும் அதேபோன்று நெல் கொள்வனவிற்காக வருகின்ற வாகனங்களுக்கான எரிபொருளையும் எந்தவித கால தாமதங்களும் இன்றி வழங்குவதற்கு எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனவே எரிபொருள் நெருக்கடியை காரணம் காட்டி எந்தவித அதிகமான கொடுப்பனவுகளையும் அறுவடை இயந்திர உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டாம் என விவசாயிகளைக் கேட்டுக்கொள்கிறோம்.

அத்தோடு மீனவர்களுக்கான எரிபொருளை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் நாம் செய்திருக்கிறோம். எரிபொருள் விற்பனை நிலைய உரிமையாளர்கள் இன்றைய தினம் பெட்ரோலிய கூட்டு தாபனத்திடம் எரிபொருளைக் கேட்டிருக்கிறார்கள் அதனை உடனடியாக வழங்குமாறு நாம் பெற்றோலிய கூட்டு தாபனத்திடம் கோரியுள்ளோம்.அத்தோடு மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் அனைத்து தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் தேவையான அளவு எரிபொருளை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். எனவே மக்களுக்கு இந்த வேளையில் நாம் ஒரு வேண்டுகோளை விடுக்கிறோம். எரிபொருளுக்காக முண்டியடித்து செல்லாது தேவையற்ற முறையில் சேமித்து வைக்காது கிரமமான முறையில் எரிபொருளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

மேற்படி கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர், கூட்டுறவு அபிவிருத்தி சங்க உதவி ஆணையர், கடற்தொழில் மற்றும் மீன்பிடி நீர் வளங்கள் உதவி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையர், MPCS பொது முகாமையாளர் மன்னார், எரிபொருள் வழங்குநர் மற்றும் உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here