‘கிளீன் ஸ்ரீலங்கா’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முருங்கன் நகரில் சுகாதார விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நேற்று (10.03) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெற்றது.
54வது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ. எம். சி. அபேகோனின் வழிகாட்டுதலில் 542வது காலாட்படை பிரிகேட்டின் பொறுப்புப் பகுதியில் உள்ள முருங்கன் நகரத்திலிருந்து கட்டுக்கரை குளம் வரை இந்த சுத்திகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, நானாட்டான் வைத்திய அதிகாரி பணிமனை, முருங்கன் பொலிஸ் நிலையம், நானாட்டான் பிரதேச சபை, வர்த்தகர் சமூகம் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து சுற்றுப்புறங்களை சுத்தம் செய்ததுடன், சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சி 542வது காலாட்படை பிரிவின் தளபதி பிரிகேடியர் ஏ.ஆர்.டபிள்யூ.சி. அசுரசிங்க அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஜயபாகு காலாட்படை படைப்பிரிவின் 8வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ். எச். ஆர். ஜே. டி சில்வா தலைமையில் அதிகாரிகள் மற்றும் படையினர் மேற்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை 542வது காலாட்படை பிரிகேட்டின் சிவில் அலுவல்கள் அதிகாரி லெப்டினன்ட் கேணல் வாண்டு ஜெயசுந்தர மேற்கொண்டார்







