தேர்தல் ஆணைக்குழுவின் இ-சேவைகள் விரிவாக்கம்

87
0
Spread the love

பொதுமக்கள் தமக்கான சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்காக, தேர்தல் ஆணைக்குழு தனது இணையவழி “தேர்தல் இ-சேவை” (E-Services) முறையை மேலும் விரிவாக்கியுள்ளது.

இதன்படி, கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் அல்லது தேர்தல் ஆணைக்குழுவிற்கு நேரில் செல்லாமலேயே, இணையம் ஊடாகத் தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

https://eservices.elections.gov.lk அல்லது ec.lk/es ஆகிய இணையத்தள முகவரிகள் ஊடாக (அல்லது QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம்) இந்தச் சேவைகளை அணுக முடியும்.

இணைய வசதி கொண்ட எந்தவொரு கணினி அல்லது ஸ்மார்ட்போன் மூலமும் நாளின் எந்த நேரத்திலும் இச்சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த இ-சேவைகளின் கீழ் பின்வரும் வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது:

2026 வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு அமைய வாக்காளர் பட்டியலின் வரைவுத் தகவல்களைப் பரிசோதித்தல், வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய விண்ணப்பித்தல் அல்லது வசிப்பிட முகவரியை மாற்ற இணையவழியில் விண்ணப்பித்தல்.

18 வயது பூர்த்தியடைந்தும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத பிரஜைகள் தமது பெயரைப் பதிவு செய்துகொள்ளல்.

18 வயது பூர்த்தியாகாத, ஆனால் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்ட இளம் பிரஜைகள் எதிர்காலத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக்கொள்ளல்.

2015ஆம் ஆண்டு முதல் இதுவரையான வாக்காளர் பதிவு விபரங்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் தேர்தல் ஆணையாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் கூடிய வாக்காளர் பதிவு உறுதிப்படுத்தல் கூற்றினைப் (Certified Registration Statement) பெற்றுக்கொள்ளல்.

மாற்றுத்திறனாளி பிரஜைகள் வாக்களிப்பதற்குத் தேவையான விசேடத் தேவைகளைத் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு.

மேலும், இந்தச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் அந்தந்த இணைய நுழைவாயில்களில் (Portal) வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here