தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழை காரணமாக ஹட்டன் பிரதான பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், நகரின் பல பகுதிகளிலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஹட்டன் பேருந்து நிலையத்திற்கு மேலே அமைந்துள்ள காமினிபுர பகுதியிலிருந்து பெருமளவான மழைநீர் பேருந்து நிலையத்திற்குள் பாய்ந்து தேங்கியுள்ளதால், அங்குள்ள எம்.ஆர். பிரதான சாலையின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர் மழையின் காரணமாக ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கணக்குப் பிரிவிலும் நீர் கசிவு ஏற்பட்டு ஊழியர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். தீபாவளிப் பண்டிகையைக் முன்னிட்டு தொலைதூரப் பகுதிகளிலிருந்து வருகை தந்த சில வணிகர்கள் கழிவுப் பொருட்களைப் பிரதான சாலையில் வீசியதனால் மழைநீருடன் குப்பைகளும் சேர்ந்து தேங்கி நிற்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சீரற்ற வானிலை தொடரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் வாகனச் சாரதிகள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.







