விசேட வைத்திய நிபுணரின் வைத்தியசாலைப் பதவிகள் நீக்கம் – GMOA அறிவிப்பு

115
0
Spread the love

நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்களின் வைத்தியசாலை பதவிகள் நீக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) குற்றம் சுமத்தியுள்ளது.

தரநிலைப்படுத்தப்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் அரசியல் தலையீடுகள் காணப்படுவதாக அந்தச் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வைத்தியசாலைகளுக்கு 3,000 விசேட வைத்திய நிபுணர்கள் தேவைப்படுகின்ற போதிலும், தற்போது 2,100 பேர் மாத்திரமே பணியில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய வைத்தியசாலைகளின் சில அலகுகளை மூடுவதற்கு தற்போதைய ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ராகம விசேட பிரிவிலுள்ள சிறுநீரக மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அலகை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விசேட வைத்திய நிபுணரின் பதவி நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், சிறுவர் வைத்தியசாலையிலுள்ள மேலதிக விசேட வைத்திய நிபுணர் அலகு ஒன்று மூடப்பட்டுள்ளது.

ராகம சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளிப் பிரிவின் (OPD) விசேட வைத்திய நிபுணர் பதவியை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வவுனியா வைத்தியசாலையின் வெளிநோயாளிப் பிரிவிலுள்ள விசேட வைத்திய அலகு ஒன்று அரசியல் தலையீடுகள் காரணமாக நீக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான காரணங்களால் விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here