எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்

8
0
Spread the love

எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு (G.M.R.D. Aponsu) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (17.04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளிக்கப்பட்டது.

நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளராகக் கடமையாற்றிய ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு, இலங்கை திட்டமிடல் சேவையின் (SLPS) சிரேஷ்ட அதிகாரியாவார். அவர் தேசிய திட்டமிடல், பொது நிதி மேலாண்மை, பருவகால பொருளாதார முன்கணிப்பு, அபிவிருத்தி நிதி, நிதி பகுப்பாய்வு, வரி கொள்கை மற்றும் உயர்கல்வி திட்டமிடல் ஆகிய துறைகளில் நீண்டகால அனுபவமிக்கவர்.

ஜனாதிபதி செயலகத்தின் நிதி மற்றும் பொருளாதார விவகார பிரிவின் தலைவராகப் பணியாற்றிய அவர், பொருளாதார நிர்வாகம் மற்றும் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பான மூலோபாயக் கொள்கை வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்.

லுனாவ ரோமன் கத்தோலிக்க பாடசாலை மற்றும் மொரட்டுவ உயன ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற அவர், ப/கெப்பட்டிபொல மகா வித்தியாலயத்தில் கனிஷ்ட இடைநிலைக் கல்வியையும், பண்டாரவளை புனித ஜோசப் கல்லூரியில் சிரேஷ்ட இடைநிலைக் கல்வியையும் பூர்த்தி செய்துள்ளார்.

ருஹுனு பல்கலைக்கழகத்தில் (1994) பௌதிகவியலில் (சிறப்பு) இளங்கலைப் பட்டத்தையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் வளிமண்டல பௌதிகவியலில் முதுகலைப் பட்டத்தையும், அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார். அத்துடன் ஜப்பானின் IDEAS நிறுவனத்தில் அபிவிருத்தி ஆய்வுகள் குறித்தும் பயின்றுள்ளார்.

தனது அரச சேவைக் காலத்தில் தேசிய திட்டமிடல் திணைக்களம், தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களிலும் கல்வி அமைச்சிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

கூடுதலாக, ருஹுனு பல்கலைக்கழகத்தில் பௌதிகவியல் உதவி விரிவுரையாளராகவும், இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் (SLIDA) திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி பொருளாதாரம் குறித்த வெளிவாரி விரிவுரையாளராகவும் சிரேஷ்ட ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித வள மேம்பாட்டு நிறுவனத்தில் (IHRA) முதுகலை பாடநெறிகளுக்கான திட்ட மேலாண்மை வெளிவாரி விரிவுரையாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here