காவியுடையில் நடைபயணம் செய்தவர் அரசியல்வாதி எனத் தகவல்

10
0
Spread the love

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக காவியுடை அணிந்து, நாக உருவம் பொறிக்கப்பட்ட மரக்கைத்தடியுடன் நடைபயணத்தை ஆரம்பித்த நபர் தொடர்பில் சமூக ஊடகங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.

‘சிவுருக்கு நீதி’ என்ற தொனிப்பொருளில் கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்பட்ட இந்த நடைபயணத்தில் பௌத்த பிக்குவைப் போன்று தோற்றமளித்த நபர் ஒருவர் கலந்துகொண்டிருந்தார்.

எனினும், குறித்த நபர் பௌத்த பிக்கு அல்லர் என்றும், அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அம்பலாங்கொடை முன்னாள் நகர சபை உறுப்பினர் கிரேஷன் கெரமினியே என்றும் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னரும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு ஆதரவான அரசியல் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்படும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

குறித்த நடைபயணம் அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சிங்கள பௌத்த உணர்வுள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

கடுகண்ணாவை பரமிதா பௌத்த நிலையத்திலிருந்து ஆரம்பித்து கேகாலை வழியாக கொழும்பைச் சென்றடைவதே ஏற்பாட்டாளர்களின் திட்டமாக இருந்துள்ளது.

இந்நிலையில், நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டபோது சுமார் ஆறு பேர் மாத்திரமே கலந்துகொண்டிருந்ததாகவும், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது குறித்த நபர் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடைபயணத்தின் பின்னணி மற்றும் நோக்கம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பௌத்த காவியுடை மற்றும் பாரம்பரிய அடையாளங்கள் அரசியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here