அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (22.04) முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
பண்டிகை கால செலவுகளைக் கருத்திற்கொண்டும், முதியோர்களின் நலன் சார்ந்தும் இந்த நிதியைத் தாமதமின்றி வழங்க அரசாங்கம் விசேட நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த மாதக் கொடுப்பனவில் 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக இரண்டு கட்டங்களாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 70 வயதுக்கு மேற்பட்ட 617,406 பயனாளர்களுக்கு மொத்தமாக 3.087 பில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
அதே வயதுப் பிரிவைச் சேர்ந்த மேலும் 72,525 பயனாளர்களுக்கு 362.6 மில்லியன் ரூபாய் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது.
தகுதியுடைய பயனாளர்கள் தங்களது வங்கிக் கணக்குகளைச் சரிபார்த்து, உரிய கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி
நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்திற்குப் பின்னர் எஞ்சியுள்ள பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தத் தொகை பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.







