சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வனத் திணைக்களத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட “வனவியல் சுற்றுலா மற்றும் உறவுப்பாலம்” செயற்றிட்டம் அண்மையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
வனத் திணைக்களத்தின் ஆதரவுடனும் எஸ்.எஸ்.டி. மொபைல் (SSD Mobiles) தனியார் நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடனும் முன்னெடுக்கப்பட்ட இச்செயற்றிட்டம், இன மற்றும் மொழி வேறுபாடுகளை நீக்கி தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் , காடுகளின் அவசியத்தை இளம் தலைமுறைக்கு எடுத்துரைக்கும் நோக்கத்துடனும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்திலுள்ள கிளி/கறுக்காய்தீவு மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 36 பேர் இதில் பங்கேற்றனர்.
இவர்களுக்காக மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களில் அமைந்துள்ள நக்கிள்ஸ் வனாந்தரப் பகுதிகளுக்கு சுற்றுலா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. (08.05) ஆரம்பிக்கப்பட்ட மூன்று நாள் சுற்றுலாவின் போது தம்புள்ளை குகை ஓவியங்கள், களுகங்கை நீர்த்தேக்கம், நக்கிள்ஸ் தகவல் மையம், ரிவர்ஸ்டன் மலைப்பகுதி மற்றும் சேரஎல்ல நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல இடங்கள் பார்வையிடப்பட்டன.
மேலும், சிங்கள மற்றும் தமிழ் மாணவர்கள் இணைந்து கலந்துகொண்டமை நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்ததுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் சகோதரத்துவ ஒற்றுமை தொடர்பான விழிப்புணர்வுகளும் இதன்போது ஏற்படுத்தப்பட்டன.
குறித்த சுற்றுலாவில், மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த மஹாஒய கனிஷ்ட வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் இணைந்துகொண்டதோடு மாத்தளை மாவட்ட வன அதிகாரி, நக்கிள்ஸ் வட்டார வன அதிகாரி, யாழ் வட்டார வன அதிகாரி, பளை வனவிரிவாக்கல் உத்தியோகத்தர் மற்றும் முழங்காவில் பகுதி வன உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.







