ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு

34
0
Spread the love

இம்முறை புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களின் மத விழாக்களில் ஒன்றான புனித ஹஜ் பெருநாள் இம்முறை மே 28 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் அதிபரினால் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, விசேட தொழுகைகள் நடைபெறும் பள்ளிவாசல்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கும் வகையில் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அத்துடன், பள்ளிவாசல்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், அங்கு வருவோருக்கு தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதற்கும் விசேட போக்குவரத்துத் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது.

இஸ்லாமிய மக்கள் அதிகமாக நடமாடும் நகரப் பகுதிகளை மையமாகக் கொண்டு நடமாடும் ரோந்துச் சேவைகள், முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ரோந்துச் சேவைகளும் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாதுகாப்புப் பணிகளை வலுப்படுத்துவதற்காக புலனாய்வுப் பிரிவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், தேவையான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் இந்த பாதுகாப்புத் திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ள பொலிஸார், சந்தேகத்திற்கிடமான நபர்களோ அல்லது பொருட்களோ காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 119 / 118 ஆகிய அவசர அழைப்பு எண்களுக்கோ அறிவிக்குமாறு கோரியுள்ளனர்.

இஸ்லாமிய மக்கள் தங்களது மத வழிபாடுகளை அச்சமின்றியோ அல்லது எவ்வித தடைகளுமின்றியோ அமைதியான சூழலில் நிறைவேற்றுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவதும், மத நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதுமே இலங்கை பொலிஸாரின் நோக்கமாகும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here