எந்தவொரு நெருக்கடிக்கும் முகம் கொடுக்கக்கூடிய நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் – ஐனாதிபதி

42
0
Spread the love

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது எப்படியாவது ஐந்து வருடங்களை கடந்து செல்வதற்காக அல்ல என்றும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படக்கூடிய எந்தவொரு நெருக்கடிக்கும் முகம் கொடுக்கக்கூடிய நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கே என்றும், இன்றைய நாட்டின் பொருளாதாரம் பயணிக்க வேண்டிய திசை குறித்த சரியான தொலைநோக்கு மற்றும் திட்டத்துடன் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த கால அரசாங்கங்கள் வர்த்தக சந்தையில் அதிக வட்டிக்கு கடன் பெற்று தங்களது ஐந்து வருட காலத்தை கடந்து சென்றபோதிலும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இப்போது பல்வேறு பிரதான பொருளாதார காரணிகளில் வெற்றிகள் ஈட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த பயணப்பாதையின் ஊடாக நாடு மிகவும் வலுவானதொரு பொருளாதாரத்தை நோக்கி பிரவேசித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மத்திய அதிவேகப்பாதையின் மூன்றாவது பகுதியின் இரண்டாம் கட்டத்தின் கீழ், ரம்புக்கனையிலிருந்து கலகெதர வரையிலான 18.7 கிலோமீற்றர் பகுதியின் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்து, கலகெதர பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (29) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இலங்கையில் முதன்முறையாக எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் அரசாங்கம் உருவாகியிருப்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கடன் நிலைபேற்றுத்தன்மையையும் கடன் முகாமைத்துவத்தையும் சிறந்த மட்டத்தில் பேணி, நாட்டுக்குத் தேவையான அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ், உள்நாட்டு நிதி மற்றும் உள்நாட்டு ஒப்பந்த நிறுவனங்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக 112.44 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. 04 வழிகளைக் கொண்ட இந்த வீதிப் பகுதியின் நிர்மாணப் பணிகளை 2029-05-28 ஆம் திகதி நிறைவு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பொத்துஹெர முதல் ரம்புக்கனை வரையிலான முதற்கட்ட நிர்மாணப் பணிகளை அடுத்த வருட நடுப்பகுதிக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here