மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலவரம் குறித்த எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (18) பிற்பகல் 1.00 மணி முதல் நாளை (19) பிற்பகல் 1.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், இப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படலாம்.
எனவே, கடற்சார் மற்றும் மீனவச் சமூகங்கள் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.







