ஊடகவியலாளர்களுக்கான விசேட காப்புறுதி திட்டம் விரைவில்

16
0
Spread the love

ஊடகவியலாளர்களுக்கான விசேட காப்புறுதி திட்டமொன்றை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வெகுஜன ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று முன்தினம் (02.08.) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர்,அங்குள்ள ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பிராந்திய ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பு மற்றும் அறிக்கையிடல் பணிகளின் போது எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், ஊடகவியலாளர்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் அரச ஊடக நிறுவனங்களுடன் கலந்துரையாடி உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும், தனியார் ஊடக நிறுவனங்களும் தமது ஊடகவியலாளர்களுக்கான கொடுப்பனவுகளை முறையாக வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், இந்தத் திட்டம் ஒரு வருடத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில்கள், கடன் வசதிகள் மற்றும் வீடமைப்பு திட்டங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் கவனத்தில் கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கலைஞர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்பு திட்டங்களைப் போன்று ஊடகவியலாளர்களுக்கும் வீடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், 2029ஆம் ஆண்டுக்குள் வீடற்ற அனைவருக்கும் வீடுகளை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களும் பயன்பெறுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை,கடத்தப்பட்ட,காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், குறித்த சம்பவங்கள் தொடர்பில் தேவையான ஆதாரங்களை திரட்ட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு அல்லது தெற்கு என்ற வேறுபாடின்றி, பாதிக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here