சீரற்ற வானிலை- புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து நாளை தீர்மானம்

29
0
Spread the love

நாட்டில் தொடரும் மழையுடனான வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, எதிர்வரும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளை தடையின்றி நடத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை (05) இடம்பெறவுள்ளது.
வானிலை ஆய்வு திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மையம் மற்றும் பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வானிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாக வானிலை ஆய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை திட்டமிடுவதற்காக குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தினால் மழைவீழ்ச்சி அதிகரித்துள்ளதாகவும், எதிர்வரும் 6ஆம், 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளுக்குப் பின்னர் மழை நிலைமை ஓரளவு குறையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் 10ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பமாக உள்ளதால், அதற்குள் தற்போதைய வானிலை தாக்கம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பசிபிக் பெருங்கடல் பகுதியில் உருவாகி வரும் சூறாவளி அமைப்பின் தாக்கத்தால் எதிர்வரும் நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் மழை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here