ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல் ஆகிய அனைத்தும் ஒடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான சட்டங்களும் அரச நிறுவனங்களும் உள்ளன என்றும் துரதிர்ஷ்டவசமாக தற்போது எதிர்க்கட்சியினரே இவற்றுக்கெல்லாம் பிரதான குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக மாறியுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவது குறித்த பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
குற்றங்களை ஒடுக்குவதில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர பெரும் பங்காற்றி வருவதாகவும், இன்று அவர் எதிர்க்கட்சியின் எதிரியாக மாறியுள்ளார் என்றும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.
இதேவேளை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அமைச்சர் ஆனந்த விஜேபால, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் திலீப பீரிஸ் மற்றும் நீதிமன்றமும் இன்று எதிர்க்கட்சியின் எதிரிகளாக மாறியுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.
“இன்று நியாயம், நீதி, ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி என்பவற்றை எதிர்க்கட்சியால் தாங்கிக்கொள்ள முடியாமல் உள்ளது. அரசுக்குள்ளே இருந்து கொண்டு, அரச அனுசரணையுடன் குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்தால், அந்த குற்றவாளிகளை வெளிப்படுத்தக் கூடாதா? அது நாட்டை காட்டிக்கொடுப்பதா? அது தேசத்துரோகமா? இல்லை, அது ஒரு நாகரீகமான அரசை கட்டியெழுப்பும் நோக்கமாகும். எமது அரசை நாம் ஒரு நாகரீகமான அரசாக மாற்ற வேண்டும்.”
“நமது நாடு ஒரு ஊழல் நிறைந்த அரசாக இருந்தது. எமது இராணுவம், புலனாய்வுப் பிரிவினர் மீதான கௌரவம், பாராட்டு மற்றும் விசுவாசம் எமக்கு உள்ளது. ஆனால், எமது இராணுவமும் புலனாய்வுப் பிரிவினரும் நாட்டின் பாதுகாப்புக்காகவும், மக்களின் பாதுகாப்புக்காகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும்போது, அவர்கள் எங்கேனும் அநீதிக்குள்ளானால் நாம் அவர்களுக்காக முன்னிற்போம். உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மக்களின் பாதுகாப்புக்காகவும், நாட்டின் பாதுகாப்புக்காகவும் இராணுவமும் புலனாய்வுப் பிரிவும் செயற்பட்டிருந்தால், அவர்களை எந்த இடத்திலும் பாதுகாக்கவும் கௌரவிக்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். அந்தப் பணியை நாம் செய்வோம்.”
“ஆனால், இராணுவத்திலோ அல்லது புலனாய்வுப் பிரிவிலோ உள்ள ஒரு சிறிய குழுவினர், ஏதேனும் ஒரு குடும்பத்தின் அதிகாரத்துக்காக அல்லது ஒரு அரசியல் முகாமின் அதிகாரத்துக்காக அரச தேவையின் பேரில் குற்றங்களைச் செய்திருந்தால், அவர்களுக்குரிய தண்டனையை வழங்க எமது அரசாங்கம் தயங்காது.”
“தங்கள் அதிகாரத்துக்காக, ஒரு குடும்பத்தின் மற்றும் தங்கள் அரசியல் முகாமின் அதிகாரத்துக்காகச் செய்யப்பட்ட குற்றங்களான தாஜுதீன் விவகாரமும் அப்படித்தான், ஈஸ்டர் தாக்குதலும் அப்படித்தான்… இவற்றின் பின்னணியில் மிகச் சிறிய அரச இயந்திரத்தின் இயக்குநர்கள் இருந்தனர். இதனை நாட்டுக்கு வெளிப்படுத்தக் கூடாதா? நாட்டில் வெள்ளை வென் பயம் இருக்கவில்லையா? இலக்கத் தகடுகள் இல்லாத வெள்ளை வென்களில் வந்து, தங்கள் காணியில் வீட்டை உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மனிதர்களைக் கடத்தினார்கள். இவை சிவில் மோதல்கள் அல்ல. ஒரு சிறிய குழுவினர் தங்களின் அரசியல் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டு இக்கொடூரக் கொலைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்த நாம் நிச்சயமாகக் கடமைப்பட்டுள்ளோம்.”
இதற்கு விபரீதமாக அல்லது எதிராகச் செயற்படக்கூடியவர்கள் இக்குற்றங்களினால் லாபம் ஈட்டியவர்கள் மாத்திரமே எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளை யாராவது அச்சுறுத்தினால் அல்லது அழுத்தம் கொடுத்தால், அரசாங்கம் அவர்கள் சார்பில் முன்னிற்கும் என்றும், பொதுமக்களும் அவர்களுக்காக முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.







