1,000 தேசியப் பாடசாலைகளை உருவாக்கும் நோக்கில் 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டத்திற்காக சுமார் 1,600 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்ட போதிலும், இதுவரை 22 பாடசாலைகள் மட்டுமே தேசியப் பாடசாலைகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் தலா 3 தேசியப் பாடசாலைகள் என்ற அடிப்படையில் 1,000 பாடசாலைகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டு 802 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டதாகவும், ஒவ்வொன்றிற்கும் பௌதிக வள மேம்பாட்டிற்காக ஒரு மில்லியன் ரூபாய் மற்றும் உபகரணங்களுக்காக ஒரு மில்லியன் ரூபாய் வீதம் தலா 2 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். 2023 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் இத்திட்டம் இடைநிறுத்தப்பட்ட போதிலும், நிதி வழங்கப்பட்ட 802 பாடசாலைகளில் நடத்தப்பட்ட விசாரணையில் எவ்வித முறைகேடுகளும் கண்டறியப்படவில்லை என்றும், மதில் சுவர், நுழைவாயில், பெயர்ப்பலகைகள் அமைத்தல் மற்றும் உபகரணக் கொள்வனவுகள் முறையாக இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், 2025 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் 396 பாடசாலைகளுக்கு மேல் தேசியப் பாடசாலைகளாக மாற்றுவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது எனத் தெரிவித்த நிலையில், தற்போதுள்ள 396 தேசியப் பாடசாலைகளுக்குள் புதிதாக இணைக்கப்பட்ட 22 பாடசாலைகளும் அடங்குகின்றன என நாலக களுவெவ விளக்கமளித்தார்.






