கொழும்பு முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்துக்கு அருகில் ஏற்பட்ட திடீர் டீசல் கசிவை விரைவாகக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் எண்ணெய் விநியோக முகாமைத்துவக் குழுவினரால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்புத் துறைமுகத்தின் ஜய கொள்கலன் முனையத்துக்குச் சொந்தமான புளூமெண்டல் பகுதியில் அமைந்துள்ள களஞ்சியத் தாங்கியொன்றின் குழாய் இணைப்பில் நேற்று (21) ஏற்பட்ட திடீர் உடைப்பால் கசிந்த டீசல், பிரதான வடிகால் கால்வாய் வழியாகப் பாய்ந்து முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்துக்கு அருகில் கடல் பகுதியுடன் கலந்துள்ளது. தகவல் கிடைத்ததும் உடனடியாகச் செயற்பட்ட அக்குழு, டீசல் கடலில் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காகக் கால்வாய் கடலில் இணையும் இடத்தில் விசேட எண்ணெய் தடுப்பை அமைத்ததுடன், கரையோரப் பகுதிக்கு அடித்து வரப்பட்ட டீசலை முழுமையாக அகற்றி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது







