யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்திய அரசு நிதியுதவி வழங்கிய போதிலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில் இலங்கை அரசு அவற்றை மேம்படுத்தாமல் புறக்கணித்து வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (22) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பனிமூட்டம் மற்றும் காற்று மாசு காரணமாக யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில், விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூடப் பொருத்தப்படாதது அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார். இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்கள் யாழ்ப்பாணம் ஊடாக வருவதைத் தவிர்த்து கொழும்பு வழியாகவே வர வேண்டும் என்பதற்கான முயற்சியாகவே இது உள்ளதாகத் தெரிவித்த அவர், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டும் முன்னெடுக்கப்படாத அபிவிருத்திப் பணிகள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முறையிடவுள்ளதாகவும் கூறினார்.







