கிழக்கு மாகாணத்தில் காணி விவகாரங்களைக் கையாள்வதற்காக விசேட குழு ஒன்றையும், பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையில் முழு அதிகாரம் கொண்ட விசேட பொலிஸ் பிரிவொன்றையும் அமைக்க அமைச்சரவை அண்மையில் எடுத்த தீர்மானம் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை உடனடியாக ரத்து செய்யவோ அல்லது இடைநிறுத்தவோ நடவடிக்கை எடுக்குமாறு கோரி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இலங்கை நீதிக்கான மையம் அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகள் மற்றும் கடலோர அத்துமீறல்களைத் தடுப்பதற்காக இந்த புதிய பொறிமுறை
அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டாலும், சிறுபான்மையினர் அதிகம் வாழும் கிழக்கு மாகாணத்தை மட்டும் இலக்கு வைத்து எடுக்கப்பட்ட தன்னிச்சையான தீர்மானம் போன்றுள்ளதென அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
காணி ஆக்கிரமிப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் கிழக்கு மாகாணத்தில் மட்டுமின்றி, தெற்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்கள் உட்பட நாடு முழுவதும் காணப்படும் பிரச்சினைகளாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கிழக்கு மாகாணத்துக்கு மட்டும் தனிப்பட்ட விசேட குழுவை அமைப்பது மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தக்கூடும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது







