வடக்கு, கிழக்கில் கனமழை இடி மின்னல் அபாயம் எச்சரிக்கை

36
0
Spread the love

தற்போது வடக்கு மாகாணத்தின் வடகிழக்கு திசையில் இருக்கும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று இரவு அரபிக்கடல் நோக்கி நகரத் தொடங்கும் வாய்ப்புள்ளது. ஆரம்பத்தில் தெற்கு திசையில் நகர்ந்து பின்னர் தென்மேற்கு திசையில் நகர்ந்து பாக்கு நீரிணை மற்றும் வடக்கு மாகாணத்தினை உள்ளடக்கி அரபிக் கடல் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சுழற்சி நாளை(21.10.2026) காலை 9.00 மணியளவில் மன்னார் தீவுகளுக்கு மிக அண்மையாக நிலை கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இன்று மாலை 6.00 மணி முதல் 10.00 மணிவரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இந்த மழையின் போது செறிவான இடி மின்னல் நிகழ்வுகள் இடம்பெறும்.
இந்த மழை இடைவெளிகளுடன் கூடியதாக எதிர்வரும் 23.10.2026 வரை வடக்கு கிழக்கு, வடமத்திய, வடமேல் மேற்கு மாகாணங்களுக்கு தொடரும் வாய்ப்புள்ளது.
இடி மின்னல் நிகழ்வுகள் இரண்டு பிரதான வகைகளில் நிகழும்.
1. முகில்களுக்கிடையில் கிடையாக- நிகழும் போதுஎமக்கான பாதிப்புக்கள் குறைவு.
2. முகிலுக்கும் தரை மேற்பரப்புக்கும் இடையில் குத்தாக- நிகழும்போது எமக்கான பாதிப்புக்கள் அதிகம்.
தற்போது நிகழ்வதும் எதிர்வரும் 22.10.2026 வரையும் மழை கிடைக்கும் போது நிகழும் இடி மின்னல் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. இது பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியது.
எனவே மக்கள் இது தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.
இந்த இடி மின்னல் நிகழும்போது….
1. மரங்களுக்கு கீழே நிற்க வேண்டாம்.
2. பரந்த வெளிகளில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.
3. திறந்த வாகனங்களில்( மோட்டார் சைக்கிள், சைக்கிள்) பயணம் செய்ய வேண்டாம்.
அதேவேளை முன்னரே குறிப்பிட்டபடி எதிர்வரும் 23.10.2026 அன்று வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அண்மையாக தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது புயலாக மாறும் வாய்ப்புள்ளது. இதனால் இலங்கையின் எந்த ஒரு பகுதிக்கும் நேரடியாக எந்தப் பாதிப்பும் கிடையாது. ஆனால் எதிர்வரும் 26.10.2026 முதல் 29.10.2026 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண மீனவர்கள் 22.10.2026 வரை கடலுக்கு செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here