இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலம் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், உள்ளூர் வர்த்தகங்களையும் வலுப்படுத்த வேண்டும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தில் (SLITHM) நேற்று (27) நடைபெற்ற ஹோட்டல் மற்றும் விடுதி முகாமைத்துவக் கௌரவப் பட்டப்படிப்புத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பட்டப்படிப்புத் திட்டத்தின் முதலாவது மாணவர் குழுவில் 65 பேர் இணைந்துள்ளனர். இத்திட்டத்தின் ஆரம்பமானது, இலங்கையின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைக்குத் தேவையான திறமையான மனிதவளத்தை உருவாக்குவதில் முக்கியமான முன்னேற்றமாக அமையும் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை என்பது வருமானத்தை ஈட்டும் பொருளாதார நடவடிக்கை மட்டுமல்ல எனச் சுட்டிக்காட்டிய அவர், பல்வேறு கலாசாரங்களை இணைக்கும் பாலமாகவும், சர்வதேச உறவுகளை மேம்படுத்தும் தளமாகவும், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு வாய்ப்புகளை வழங்கும் துறையாகவும் அது விளங்குவதாகக் கூறியுள்ளார்.
அரசாங்கம் எதிர்பார்க்கும் சுற்றுலாத்துறை வளர்ச்சியின் பலன்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களைச் சென்றடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, இளைஞர்களுக்குத் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், உள்ளூர் வணிகங்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
2030ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு அரசாங்கம் வகுத்துள்ள சுற்றுலாத்துறை அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் முதலீடுகளை அதிகரிப்பதும் மாத்திரம் போதுமானதல்ல என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இத்துறையில் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு திறமையான பணியாளர்கள், வலுவான நிறுவனங்கள், புதுமையான சிந்தனைகள் மற்றும் தொழில்சார் தரத்தைப் பேணுவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவை அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சுற்றுலாத்துறையின் வளர்ச்சியில் பெண்கள் தீவிரமாகப் பங்கேற்பதற்கும், அதன் மூலம் கிடைக்கும் பொருளாதார நன்மைகளைப் பெறுவதற்கும் ஏற்ற வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிகழ்வில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் பிரதிநிதிகள், உயர்கல்வித்துறை சார்ந்தவர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.







