இலங்கையில் நிதிச் சுமையைக் குறைத்து அரச நிர்வாகத்தை வினைத்திறனுடன் முன்னெடுக்கும் நோக்கில் 34 அரச நிறுவனங்களை மூடுவதற்கும் சில நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற அரசாங்க நில அளவையாளர் சங்கத்தின் நூற்றாண்டு விழாக் கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள 34 அரச நிறுவனங்களை மூடுவது தொடர்பான தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலப்போக்கில் நாட்டின் பொருளாதார மற்றும் நிர்வாகச் சூழல் மாறியுள்ள நிலையில், முன்னர் அரசாங்கத்தினால் மட்டுமே வழங்கப்பட்ட சில சேவைகளை தற்போது தனியார் துறையினரும் வழங்கும் நிலை உருவாகியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய சூழலில், தேவையற்ற செலவுகளை ஏற்படுத்தும் நிறுவனங்களைத் தொடர்ந்து பராமரிப்பதற்குப் பதிலாக, அவற்றின் செயற்பாடுகளை மறுபரிசீலனை செய்து பொருத்தமான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச சேவையில் பணியாளர் கட்டமைப்பை மறுசீரமைப்பதும் நிர்வாகச் செலவுகளைக் குறைப்பதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதேவேளை, பொறியியலாளர்கள், தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட தகுதியான தொழில்முறை நிபுணர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கும் அவர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை உயர்த்துவதற்கான மூன்று கட்டத் திட்டத்தின் கீழ், 2027ஆம் ஆண்டளவில் அரசாங்கத்துக்கு மேலதிகமாக 330 பில்லியன் ரூபா செலவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2028ஆம் ஆண்டில் அடிப்படைச் சம்பளத்தை மீண்டும் உயர்த்தத் திட்டமிடப்படவில்லை எனவும், தேவையான கொடுப்பனவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதன் மூலம் பொதுமக்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதுடன், திறைசேரியின் நிதியை சுகாதாரம், கல்வி மற்றும் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பது போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்குப் பயனுள்ளதாகப் பயன்படுத்த முடியும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
எனினும், மூடப்படவுள்ள 34 நிறுவனங்களின் பெயர்கள், அவற்றை மூடும் கால அட்டவணை மற்றும் இதனால் பாதிக்கப்படக்கூடிய ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பான விரிவான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.







