வங்காள விரிகுடா கடற்பகுதியில் வடக்கு அந்தமான் தீவுகளுக்கு அருகில் உருவாகியுள்ள தாழ்வுப் பகுதி இன்று (24.10.2026) தீவிரமடைந்து தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக வரும் நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழைவீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள இந்த வானிலை அமைப்பு அடுத்த இரண்டு நாட்களில் மேலும் வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதன் மறைமுகத் தாக்கத்தினால் இலங்கையின் வளிமண்டலக் குழப்பநிலை அதிகரித்து, நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான மழையுடனான காலநிலை நிலவும் எனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் மழை தீவிரமடையலாம் என்பதால் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.







