இந்தியக் கடற்படையின் இரண்டு கப்பல்களும், இந்தியக் கரையோரக் காவல் படையின் ஒரு கப்பலும் நல்லெண்ண விஜயமாக இன்று (ஒக்டோபர் 26) கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளன.
இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவைச் சேர்ந்த INS Tir, INS Sujata ஆகிய கப்பல்களும், இந்தியக் கரையோரக் காவல் படைக்குச் சொந்தமான ICGS Sarathi கப்பலும் ஒக்டோபர் 26 முதல் 28ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும்.
நீண்டதூரப் பயிற்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீஷெல்ஸ் நாட்டின் விக்டோரியா துறைமுகம் மற்றும் மாலைதீவின் மாலே துறைமுகங்களுக்குச் சென்ற பின்னர், இக்கப்பல்கள் தமது தளமான இந்தியாவின் கொச்சி துறைமுகத்துக்குத் திரும்பவுள்ளன.
கப்டன் டிஜோ கே. ஜோசப் தலைமையிலான இந்தப் பயிற்சிப் படைப்பிரிவு, இந்தியக் கடற்படை, இந்தியக் கரையோரக் காவல் படை மற்றும் நட்பு நாடுகளின் கடற்படைகளில் பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு கடல்சார் பயிற்சிகளை வழங்கி வருகிறது.
கப்பல்கள் கொழும்பை வந்தடையும் போது, இலங்கை கடற்படையின் பயிற்சிப் பிரிவுக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரோஹன் ஜோசப் அவற்றைப் பார்வையிடவுள்ளார். இதன்போது கப்பல்களின் கட்டளை அதிகாரிகள், பயிற்சி அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்களுடன் அவர் கலந்துரையாடவுள்ளார். இந்தப் பயணத்தில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஐந்து பயிற்சியாளர்களும் பங்கேற்கின்றனர்.
மேலும், இந்தியக் கடற்படையின் பயிற்சியாளர்கள் திருகோணமலையில் உள்ள கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரிக்கு விஜயம் செய்யவுள்ளனர். இலங்கை கடற்படைப் பயிற்சியாளர்களும் இந்தியப் பயிற்சிக் கப்பல்களைப் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொழில்சார் பயிற்சிகள், கல்விசார் நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பரிமாற்ற நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளின் இசைக்குழுக்கள் இணைந்து வழங்கும் இசை நிகழ்ச்சி நாளை (ஒக்டோபர் 27) கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.
இவ்வாறான பரஸ்பர விஜயங்கள் இரு நாடுகளின் கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், பிராந்திய கடல்சார் பாதுகாப்பு மற்றும் நட்புறவை மேம்படுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளன.






