சுமார் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் லண்டனுக்கும் கொழும்புக்கும் இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இந்தத் தொடக்கப் பயணத்தில் இலங்கைத் தமிழ் பின்னணியைக் கொண்ட விமானி ஒருவர் பணியாற்றியமை சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி கொழும்பை வந்தடைந்த தொடக்க விமானத்தில், இலங்கையுடன் தொடர்புடைய விமானப் பணியாளர்கள் கடமையாற்றியுள்ளனர். அவர்களில் ஒருவரான பிரதீப் விமல்ராஜ், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் முதல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். அவர் இலங்கையில் பிறந்த ஈழத்தமிழர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனிலிருந்து தனது தாயகமான இலங்கைக்கான விமானப் பயணத்தை இயக்கும் குழுவில் பிரதீப் விமல்ராஜ் இடம்பெற்றமை, இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், விமானத்தின் பயணிகள் சேவைகளை மேற்பார்வையிடும் கேபின் குழுவிலும் இலங்கையுடன் தொடர்புடைய பெண் அதிகாரி ஒருவர் பணியாற்றியதாகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸின் இந்தச் சேவை, லண்டன் கேட்விக் விமான நிலையத்தையும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தையும் இணைக்கிறது. குளிர்காலப் பயண அட்டவணையின் கீழ் வாரத்தில் மூன்று நாட்கள் இந்த விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
இந்த நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை, இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான பயணத் தொடர்புகளை மேம்படுத்துவதுடன், சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச விமானப் போக்குவரத்துத் துறையில் இலங்கைப் பின்னணியைக் கொண்டவர்கள் முக்கியப் பொறுப்புகளை வகிப்பதும் இச்சம்பவத்தின் மூலம் கவனத்தைப் பெற்றுள்ளது.







