யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகப் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக 11 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரின் அனர்த்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கோப்பாய் பிரதேசத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஏழு பேரும், பருத்தித்துறை பிரதேசத்தில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 26 பேரும், கரவெட்டி பிரதேசத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள அனர்த்தத்தினால் வீடுகளுக்கும் பகுதியளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கோப்பாய் பிரதேசத்தில் ஒரு வீடும், பருத்தித்துறை பிரதேசத்தில் ஏழு வீடுகளும், கரவெட்டி பிரதேசத்தில் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, கரவெட்டி பகுதியில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்துவரும் மழையால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கும் அபாயம் நிலவுவதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.







