மாத்தளன் கடலில் மூன்று மீனவர்கள் மாயம்

8
0
Spread the love

முல்லைத்தீவு மாவட்டம் மாத்தளன் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று கடற்றொழிலாளர்கள் கரை திரும்பாத நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு கடற்றொழில் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காணாமல் போனவர்கள் 27, 28 மற்றும் 54 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் மாத்தளன் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றையவர் மன்னாரிலிருந்து மீன்பிடித் தொழிலுக்காக மாத்தளனுக்கு வந்தவர் என்றும் கூறப்படுகிறது.

குறித்த மூவரும் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி காலை 7.30 மணியளவில் மாத்தளன் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். எனினும், அவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கிராமிய கடற்றொழில் அமைப்பின் தலைவர் பாக்கியநாதன் பார்த்தீபன், உரிய திணைக்களத்தின் ஊடாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடற்படையின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தமக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

காணாமல் போன மீனவர்களை விரைவாகக் கண்டறிய கடற்படையினர் உடனடியாகத் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் விமானப்படையின் உதவியையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடலில் நிலவும் கடும் கொந்தளிப்பு காரணமாக ஏனைய மீனவர்களும் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் கடற்கரையில் காத்திருப்பதாகவும், இதுவரை அவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்காததால் உறவினர்களும் சக மீனவர்களும் கவலையடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, காணாமல் போன மூன்று கடற்றொழிலாளர்களையும் கண்டறிவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here