யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரமும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் புதைகுழி விவகாரங்களைப் போன்று மூடி மறைக்கப்பட்டு, இறுதியில் கைவிடப்படும் நிலை ஏற்படலாம் எனத் தமிழ் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் உண்மைகள் வெளிக்கொணரப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் சர்வதேசக் கண்காணிப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஒக்டோபர் 27ஆம் திகதி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் இறுதியில் கைவிடப்பட்ட விவகாரங்களாக மாறியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய சுரேஷ் பிரேமச்சந்திரன், செம்மணி விவகாரத்திலும் அதே நிலை ஏற்படக்கூடும் எனத் தமிழ் மக்கள் சந்தேகம் வெளியிடுவதாகக் கூறியுள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக அண்மையில் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையும் இந்தச் சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கமும் கடந்தகால அரசாங்கங்கள் கையாண்ட அணுகுமுறையையே பின்பற்றக்கூடும் என்ற அச்சம் உள்நாட்டிலும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களிடமும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டு, நம்பகமான முடிவுகளை எட்டுவதற்கும் நீதியை உறுதிப்படுத்துவதற்கும் சர்வதேசக் கண்காணிப்பு அவசியம் என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.







