தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியும் இணைந்து செயற்பட முடிவு

29
0
Spread the love

இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியும் உள்ளூராட்சி சபைகளில் ஒரே கட்சியைப் போன்று இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளதாகத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இரு கட்சிகளினதும் தலைவர்கள் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைகளில் இரு தரப்பையும் சேர்ந்த உறுப்பினர்கள் இணக்கத்துடனும் ஒத்துழைப்புடனும் செயற்படுவதன் அவசியம் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டதாகச் சுமந்திரன் கூறியுள்ளார்.

இதற்கமைய, இரு கட்சிகளையும் சேர்ந்த உள்ளூராட்சி சபைத் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் இரு தரப்பினரும் ஒரே அணியாகச் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய சட்டமூலங்கள் குறித்தும் இரு கட்சிகளும் கலந்துரையாடியுள்ளன. அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலம் ஆகியவை தொடர்பில் தமது தரப்பினர் கவலை கொண்டுள்ளதாகச் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் காணப்படும் சில சர்ச்சைக்குரிய ஏற்பாடுகள் புதிய சட்டமூலங்களிலும் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, பொலிஸாரிடம் வழங்கப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக்கொள்வது தொடர்பான ஏற்பாடு புதிய சட்டமூலங்களில் ஒன்றில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டமூலங்கள் தொடர்பான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், இரு கட்சிகளும் இணைந்து போராட்டமொன்றை நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளன. போராட்டத்துக்கான திகதி மற்றும் ஏனைய விபரங்கள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் கலந்துரையாடிய பின்னர் அறிவிக்கப்படும் எனச் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here