வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அரச சலுகைகள் வழங்க ஜனாதிபதி பணிப்பு

25
0
Spread the love

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய அனைத்து நலன்புரிச் சலுகைகளையும் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் ஒக்டோபர் 28ஆம் திகதி நடைபெற்ற இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகளுடனான கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்குத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டுவதன் மூலம் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றனர். எனவே, அவர்களுக்குரிய நலன்புரித் திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத் திட்டங்கள், கடன் வசதிகள் மற்றும் வரிவிலக்குடன் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான சலுகைகள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பான துல்லியமானதும் புதுப்பிக்கப்பட்டதுமான தரவுகளைப் பராமரிப்பது அவசியம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான தகவல்களை முறையாகத் தொகுத்து வைத்திருப்பதன் மூலம், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான நலன்புரித் திட்டங்களைச் சிறந்த முறையிலும் வினைத்திறனுடனும் நடைமுறைப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் நலன்களைப் பாதுகாத்து, அவர்களுக்குரிய அரச சலுகைகள் உரிய முறையில் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here