தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தி2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இந்த வரவு செலவுத் திட்ட உரை முன்வைக்கப்படவுள்ளது.
இதற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முதலாவது வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 20ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, குழுநிலை விவாதம் நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்த விவாதக் காலப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரச விடுமுறை தினங்களைத் தவிர்த்து, சனிக்கிழமைகள் உட்பட அனைத்து நாட்களிலும் நாடாளுமன்றம் காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.
விவாதங்களுக்கான நேர ஒதுக்கீட்டில் இரண்டாவது வாசிப்பு விவாதத்தின் போது ஆளுங்கட்சிக்கு 60 சதவீதமும் எதிர்க்கட்சிக்கு 40 சதவீதமும் வழங்கப்படவுள்ளது.
அதேவேளை, குழுநிலை விவாதத்தின் போது ஆளுங்கட்சிக்கு 40 சதவீதமும் எதிர்க்கட்சிக்கு 60 சதவீதமும் நேரம் ஒதுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முழுமையான விவாதங்களும் வாக்கெடுப்புகளும் டிசம்பர் 14ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.







