டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய 50 இலட்சம் ரூபா வீட்டுத்திட்டத்தின் எஞ்சிய நிதியை விடுவிக்குமாறு வலியுறுத்தி, பயனாளிகள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் ஊடாக டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டுத்திட்ட உதவியாக 50 இலட்சம் ரூபா வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, ஆரம்பகட்ட நிதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டிருந்தது.
எனினும், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்குக் கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, மேலதிக நிதி வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான எஞ்சிய கொடுப்பனவை வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், சில பயனாளிகள் தமது தற்காலிக வீடுகளையும் அகற்றிவிட்டு நிரந்தர வீடுகள் இன்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, தாமதமின்றி வீட்டுத்திட்டத்தின் எஞ்சிய நிதியை விடுவித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, போராட்டக்காரர்களின் கோரிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை எதிர்வரும் வாரத்தில் மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.







