யாழில் அரச காணி போலி உறுதி மூலம் மோசடி

22
0
Spread the love

யாழ்ப்பாணத்தில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான சுமார் 40 பரப்பு காணியை தனியார் ஒருவர் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியிருந்த நிலையில், பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த காணி மீண்டும் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவின் கரணவாய் மேற்கு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள நீரேந்து பிரதேசத்திற்குச் சொந்தமான காணியை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து, அதனைச் சுற்றி எல்லை வேலிகளையும் அமைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக நீர்ப்பாசனத் திணைக்களம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது. விசாரணைகளின் போது குறித்த காணி நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதனை மீண்டும் திணைக்களத்திடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) நீதிமன்ற பதிவாளர் தலைமையிலான அதிகாரிகள் குழு, நெல்லியடி பொலிஸாரின் பாதுகாப்புடன் காணியை நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் கையளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து காணியைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த எல்லை வேலிகளை அகற்றும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காணியை தற்போது உரிமை கோரிய நபருக்கு வேறொரு நபர் அதனை விற்பனை செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் அரச காணிகள், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான நீரேந்து பகுதிகள் மற்றும் உரிமையாளர்களை அடையாளம் காண முடியாத காணிகள் தொடர்பில் போலி உறுதிப் பத்திரங்களைத் தயாரித்து மோசடிகளில் ஈடுபடும் வலையமைப்பு செயற்படுவதாக பொலிஸார் கடந்த சில ஆண்டுகளாக எச்சரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here