இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 19 மாவட்டங்களில் 5,829 குடும்பங்களைச் சேர்ந்த 21,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் நவம்பர் 3ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் 19 மாவட்டங்களில் உள்ள 147 பிரதேச செயலகப் பிரிவுகள் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர். மேலும், மூவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலையின் தாக்கத்தினால் எட்டு வீடுகள் முழுமையாகவும், 767 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
மாவட்ட ரீதியாக அதிக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள இரத்தினபுரி மாவட்டத்தில், 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,666 குடும்பங்களைச் சேர்ந்த 10,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, இரண்டாவது அதிக பாதிப்பை புத்தளம் மாவட்டம் எதிர்கொண்டுள்ளது. அங்கு 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் 1,850 குடும்பங்களைச் சேர்ந்த 6,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.







