புதிய வாக்காளர் பதிவேடு – யாழ்ப்பாணத்தின் ஆசனம் குறைப்பு

10
0
Spread the love

இலங்கையின் 2026ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில், நாடாளுமன்ற தேர்தல் மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீட்டில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற ஆசன எண்ணிக்கை ஏழிலிருந்து ஆறாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்திற்கு ஒரு ஆசனம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய அறிவிப்பின்படி, கொழும்பு மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 18 இலிருந்து 19 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. கம்பஹா மாவட்டத்திற்கு ஏற்கனவே 19 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை மாற்றமின்றி தொடர்கிறது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் பிரதிநிதித்துவம் ஏழு ஆசனங்களிலிருந்து ஆறு ஆசனங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, பதுளை மாவட்டத்தின் நாடாளுமன்ற ஆசன எண்ணிக்கையும் ஒன்பதிலிருந்து எட்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆசன ஒதுக்கீடுகள் இலங்கையின் அரசியலமைப்பின் 98(8)ஆம் உறுப்புரைக்கு அமைவாக, வாக்காளர் எண்ணிக்கை மற்றும் அதன் விகிதாசார அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பதிவேட்டில் மொத்தம் 17,641,006 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 90,835 வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் பதுளை ஆகிய நான்கு மாவட்டங்களின் ஆசன ஒதுக்கீடுகளில் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. ஏனைய 20 தேர்தல் மாவட்டங்களின் ஆசன எண்ணிக்கைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

இந்த புதிய ஆசன ஒதுக்கீடு தற்போதைய நாடாளுமன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. எதிர்காலத்தில் நடைபெறும் பொதுத்தேர்தல்களிலேயே புதிய வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையிலான ஆசன ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here