இலங்கையின் மீன் ஏற்றுமதி வருமானத்தை 2030ஆம் ஆண்டளவில் 600 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்காக உள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏற்றுமதித் துறையின் முன்னேற்றங்கள் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அந்நியச் செலாவணி வருமானத்தை அதிகரிப்பதற்காக ஏற்றுமதித் துறையை வலுப்படுத்தும் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, மீன்பிடித் துறையின் ஏற்றுமதி வருமானத்தை உயர்த்துவதற்கும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மீன் ஏற்றுமதி மூலம் நாட்டுக்கு 6,888.9 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும், முன்னர் 285 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த மீன் ஏற்றுமதி வருமானம் தற்போது 315 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மீன்பிடித் துறையில் உள்ள வளங்களை முறையாகப் பயன்படுத்தி உற்பத்தித் திறனை அதிகரிப்பதுடன், ஏற்றுமதிச் சந்தைகளை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் கடற்றொழிலாளர் குடும்பங்களின் வருமான உயர்வுக்கும் பங்களிப்பு வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மட்டக்களப்பு மயிலத்தமடு பிரச்சினை தொடர்பிலும் கருத்து தெரிவித்த அமைச்சர், மகாவலி அதிகாரசபை, காணி மற்றும் வனத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து அமைச்சர் லால் காந்த தலைமையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் சில அரசியல் தரப்பினர் இன மற்றும் மத உணர்வுகளைத் தூண்டி அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் சம உரிமையுடன் ஒற்றுமையாக வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன் நாட்டில் இனவாதம் மீண்டும் தலைதூக்குவதைத் தடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவித்துள்ளார்.







