L
நாடு முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கு 500 மில்லியன் ரூபாய் செலவில் 50 நவீன நெல் உலர்த்தும் இயந்திரங்களை வழங்குவதற்கான புதிய திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சினால் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இத்திட்டம் தொடர்பில் கூட்டுறவு ஆணையாளர்கள் மற்றும் பயனாளிகளான கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தெளிவுபடுத்தும் விசேட கருத்தரங்கு இன்று (6) ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமைச்சின் தகவல்களின்படி, வழங்கப்படவுள்ள ஒவ்வொரு நெல் உலர்த்தும் இயந்திரமும் நாளொன்றுக்கு சுமார் 20 மெற்றிக் தொன் நெல்லை உலர்த்தும் திறனைக் கொண்டுள்ளது.
நெல் உலர்த்தும் செயற்பாடுகளை மேம்படுத்துவதுடன், கூட்டுறவுச் சங்கங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிற்பாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் நிலையான செயற்பாடுகளைக் கொண்ட கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பான முறையான அறிக்கைகளைப் பெற்றுக்கொண்ட பின்னரே இயந்திரங்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன் மூலம் நெல் அறுவடைக்குப் பின்னரான செயற்பாடுகளை வலுப்படுத்தவும், விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.







