தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (09) விசேட விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த சிறப்புக் கோரிக்கைக்கு இணங்க, குறித்த மாகாணங்களின் ஆளுநர்களின் வழிகாட்டலுடன் மாகாண கல்விப் பணிப்பாளர்களால் இந்த அறிவுறுத்தல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, விடுமுறை வழங்கப்படும் திங்கட்கிழமை நாளுக்குப் பதிலாக எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை அன்று பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் வழமைபோல் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகையைக் கொண்டாடும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எந்தவிதத் தடையுமின்றி தமது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகத் தீபாவளியைக் கொண்டாட இந்த விடுமுறை ஏற்பாடு பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.







