கொழும்புப் பகுதியில் அண்மையில் எந்தவிதமான தீவிர வளிமண்டல நிலைமைகளும் இல்லாத நிலையில் குறுகிய நேரத்தில் மிகக் கனமழை பெய்தமைக்கு ‘மேக வெடிப்பு’ (Cloud Burst) நிகழ்வே காரணம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, வெறும் 49 நிமிடங்களுக்குள் 120 மில்லிமீற்றர் அளவிலான மழை கொட்டித் தீர்த்துள்ளதாகவும், இதனையே விஞ்ஞான ரீதியாக மேக வெடிப்பு அல்லது முகிற்பேழ் மழை என அழைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 20 முதல் 30 சதுர கிலோமீற்றர் பரப்பளவில், ஒரு மணி நேரத்திற்கு 100 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழை பதிவாகும் போதே இவ்வாறு மேக வெடிப்பு ஏற்படுவதாக அவர் விளக்கியுள்ளார். வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிகுந்த காற்று மேல்நோக்கிச் செல்லும்போது உருவாகும் கார்முகில்களில், மேலெழும் வெப்பக் காற்று நீர்த்துளிகளைக் கீழே விழாமல் தடுத்து ஒன்றிணைத்துப் பெரிய நீர்த்துளிகளாக மாற்றுகிறது. பின்னர் திடீரென மேல்நோக்கி வீசும் காற்று பலவீனமடையும் போது, மேகத்தில் தேங்கியுள்ள அத்தனை நீரும் ஈர்ப்பு விசையால் ஒரே நேரத்தில் அருவி போல் கொட்டித் தீர்ப்பதன் காரணமாகவே இந்த திடீர் வெள்ள அனர்த்தம் உருவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







