நாட்டில் நிலவும் பொருளாதாரச் சூழலைக் கருத்திற்கொண்டு எரிபொருள் நிவாரணம் வழங்குவதற்காக நடப்பாண்டில் இதுவரை 98 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (06) நடைபெற்ற அமர்வின்போது கருத்துத் தெரிவித்த அவர், மத்திய கிழக்கு மோதல்கள் தீவிரமடைந்த காலப்பகுதியில் இருந்து எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாப்பதற்கும் அதன் விலைகளைத் நிலையாகப் பேணுவதற்கும் அரசாங்கம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய திறைசேரியின் ஊடாக வழங்கப்பட்டு வரும் இந்த நிவாரணத்துக்காக இதுவரை ஒதுக்கப்பட்ட நிதி எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். எனினும், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தொடர்ந்தும் இவ்வாறான நிவாரணங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் மாற்று வழிமுறைகள் குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், அதற்கேற்ப உரிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.







