தமது நீண்டகால அடிப்படை உரிமைகள் மற்றும் சேவைப் பிரமாணக் குறிப்பு தொடர்பான கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வலியுறுத்தி, எதிர்வரும் திங்கட்கிழமை (09) நாடு முழுவதும் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகவீன விடுமுறைப் போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (07) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அகில இலங்கை ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் இணைத்தலைவர் லோகிதராஜா தீபாகரன் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகத் தமது அடிப்படை உரிமைகள் மற்றும் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அரச நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு முன்பாக அறவழியில் விழிப்புணர்வுப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், உரிய சேவைப் பிரமாணக் குறிப்பு தயாரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு இதுவரை அமைச்சகங்களோ அல்லது அதிகாரிகளோ எத்தகைய நேர்மறையான தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டினார். எனவே, இந்த நியாயமான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் போராட்டத்திற்கு அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் தங்களின் பூரண ஆதரவை வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.







