செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் அகழ்வு பணியில் மொத்தமாக 33 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றுவரை 27 மனித எலும்புக்கூட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்றையதினம் மேலும் 6 மனித எலும்புக்கூட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்வடைந்துள்ளன.
இதேவேளை யாழ். செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மண்மாதிரிப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு பிரத்தியேக குழுவொன்று யாழ்ப்பாணம் செம்மணிக்கு இன்று (29.06) வருகைத்தந்துள்ளது.
மனிதப்புதைகுழி அமைந்திருக்கும் இடத்தில் மண்மாதிரிகளைப் பரிசோதனை செய்வதற்காக, சட்ட வைத்திய அதிகாரிகளால் நீதிமன்றத்துக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த விண்ணப்பத்துக்கு நீதிமன்றம் முறையான அனுமதிகளை வழங்கியதைத் தொடர்ந்து, மண் மாதிரிகளை பரிசோதனை செய்வதற்காக கொழும்பிலிருந்து குறித்த குழு வருகைதந்து பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றது.
இதேவேளை யாழ்.பல்கலைக்கழக இரசாயனவியல் பீட பேராசிரியர்களும் கார்பன் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர்.
அத்துடன், செய்மதிப் படங்கள் மூலமும், ட்ரோன் மூலமும் மேற்கொண்ட ஆய்விலும் தற்போது அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதிக்கு அருகாகவும் புதைகுழிகள் இருக்கலாம் என்று அகழ்வுப் பணிகளை முன்னெடுத்துவரும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.







