மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தின் பன்னாட்டு மாநாடு நேற்றைய தினம் (11.07) வெள்ளிக்கிழமை, காலை 8.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்றது.
உலகளாவிய விடத்தில் தீவு சமூகத்தினை ஒருங்கிணைக்கும் விதத்தில் நடாத்தப்பட்ட இந்த பன்னாட்டு மாநாட்டில், வரலாறு அறிவியல், கல்வி, கலாச்சாரம், சுற்றுச்சூழல், இலக்கியம்,சமூக பொருளாதாரம், போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும், போரின் அனர்த்தங்களினால் உருக்குலைந்து போன விடத்தல் தீவு கிராமத்தின் பொருளாதார, சமூக, கலாசார அம்சங்களை மீள்கட்டியெழுப்புவதற்கும் ஆவணப்படுத்துவதற்குமான குறிக்கோளுடன் இம் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடத்தல் தீவு கிராமத்தைச் சேர்ந்த துறைசார் வல்லுனர்கள். கல்விமான்கள்,அருட்பணியாளர்கள், மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றுபவர்களின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (11.07) காலை ஆரம்பமான நிலையில்,2 வது நாளாக இன்றைய தினம் (12.07) சனிக்கிழமையும் பிற்பகல் 1.30.மணியளவில் இடம்பெற உள்ளது.
இன்றைய தினம் (12) இடம் பெற வுள்ள நிகழ்வில், விடத்தல்தீவு கிராமத்தின் சிறப்பு, பண்பாடு மற்றும் கலை கலாசாரத்தை உள்ளடக்கிய பாரம்பரிய கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகப் பன்னாட்டு மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் இடம் பெற்ற முதல் நாள் நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக,
வவுனியா பல்கலைக்கழக ஓய்வு நிலை துணை வேந்தர் பேராசிரியர் சுப்ரமணியம் மோகனதாஸ். வவுனியா பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறைத் தலைவரும் பேராசிரியருமான கலாநிதி S.விஜய மோகன்,வவுனியா பல்கலைக்கழக ஆங்கிலத்துறை பேராசிரியர், ஞானசீலன் ஜெயசீலன்,இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பொருளியல் பேராசிரியர் நேவிஸ் மொறாயஸ், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஓய்வுநிலை திட்ட கல்விப் பணிப்பாளர் ஜனாப் முகமட் வாஹித், மேலதிக அரசாங்க அதிபர் மாணிக்கவாசகர் ஸ்ரீஸ்கந்தகுமார், தேர்தல் ஆணைக்குழு உத்தியோகத்தர் M.பாயிஸ் கலந்து கொண்டதோடு, அருட்பணி டெஸ்மன் அஞ்சலோ உள்ளிட்ட அருட்ப பணியாளர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், அழைக்கப்பட்ட விருந்தினர்கள் ,விடத்தல் தீவின் புலம்பெயர் உறவுகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.












