தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரின் குடியேற்றத்திற்கு ஆதரவு வழங்கியிருந்ததாக கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக இருக்கிற ஈழத்தமிழர் கெரி
ஆனந்தசங்கரிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இலங்கையின் முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரான செந்தூரன் செல்வகுமார் என்பவருக்கு கனேடிய குடியுரிமை வழங்குவதை ஆதரித்து கெரி ஆனந்தசங்கரி இரண்டு கடிதங்களை அனுப்பியிருக்கிறார்.
2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், அதாவது அவர் நாடாளுமன்ற உறுப்பினாராக செயற்பட்ட காலப்பகுதியில் கனடா எல்லை சேவைகள் நிறுவனத்திற்கு இந்த கடிதங்களை அனுப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் செந்தூரன் செல்வகுமார் என்பவருக்கு விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்புகள் இருப்பதாகக் கூறி, அந்நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை பல சந்தர்ப்பங்களில் அவரது குடியுரிமை விண்ணப்பத்தை நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மனிதாபிமானக் கருத்தாய்வுகளையும், அவரது குடும்பம் பிரிவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாலும், செந்தூரன் செல்வகுமார் என்ற நபருக்கு நிரந்தர கனேடிய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கெரி ஆனந்தசங்கரி சம்பந்தப்பட்ட கடிதங்களில் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பதால், கெரி ஆனந்தசங்கரி பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துருக்கின்றன.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி பயங்கரவாதத்தை ஆதரிப்பதால், அவர் தனது அமைச்சர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவது சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளதாக கனடா பிரதமருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.







