செம்மணியில் இன்று புதிதாக 03 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

70
0
Spread the love

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்று (28.07) புதிதாக 03 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள  நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 01 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த 08 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 31 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை இன்று ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ, சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு சுமந்திரன் கருத்து தெரிவித்த சுமந்திரன்,

“உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை அரசாங்கம் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும்.

இங்கு நடைபெறும் அகழ்வு பணிகளில் குழந்தைகள், வயது குறைந்தவர்களின் எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. எலும்பு கூடுகள் அசாதாரணமாக சூழலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவை தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.

மனித புதைகுழிகள் கொக்குத்தொடுவாய், மன்னார், மாத்தளை போன்று தெற்கிலும் சில இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன

இலங்கையில் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், அவை தொடர்பில் ஆய்வு செய்ய கூடிய பொறிமுறைகள் இலங்கையில் இன்னமும் இல்லாத நிலைமைகள் காணப்படுகின்றன

எனவே சர்வதேச நிபுணத்துவ உதவிகளை இலங்கை பெற்றுக்கொள்ள வேண்டும். அகழ்ந்து எடுக்கப்படும் எலும்புக்கூடுகளை முறையாக பாதுகாப்பதற்கு கூட சர்வதேச நிபுணத்துவ மேற்பார்வை வேண்டும் அதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

இந்த அரசாங்கம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதாக கூறுகிறது. உண்மைகளை மறைத்து நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை கண்டறிய சர்வதேச நிபுணர்களை நாட்டுக்கு அழைத்து, அவர்களிடம் புதைகுழி விவகாரங்களை கையளித்து , எவ்வித தலையீடுகளும் இன்றி அவர்கள் சுயாதீனமாக செயற்பட்டு அது தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here