பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் உயர்நீதிமன்றில் நேற்றைய தினம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தால், நேற்று (02.08) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள குறித்த சங்கம், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் தற்போதும் 1,350 ரூபா என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதுள்ள வாழ்க்கை செலவிற்கமைய பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அன்றாடம் 03 வேளை உணவு தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாதிருப்பதுடன், அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத வறுமையை எட்டியுள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, 200 வருட காலமாக குறைந்த சம்பளத்தை பெற்று வரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பிற்கான பெறுமதி அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர்களின் வாழ்க்கை செலவை ஈடு செய்யக் கூடியதும் உழைப்பிற்கான மதிப்பை நிர்ணயித்துக் கொள்ளக் கூடியதுமான சம்பள உயர்வை கோரி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக, இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கம் குறிப்பிட்டுள்ளது







