மன்னார் சவுத் பார் பகுதியில் அவசர அவசரமாக இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட வீதி திருத்த வேலையைத் தடுத்து நிறுத்திய மக்கள்(video)

99
0
Spread the love

நேற்றிரவு (04.08) திங்கட்கிழமை 7.30 மணியளவில் சவுத் பார் பகுதி புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் வீதி திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த ஜேசிபி இயந்திரத்தினை நிறுத்துமாறு கோரி சாந்திபுரம் மக்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மிக நீண்ட காலமாக எந்தவித திருத்த வேலைகளும் மேற்கொள்ளப்படாமல் குண்டும் குழியுமாக காணப்பட்ட வீதியினை மேலோட்டமாக செப்பனிடுவதற்கே மக்கள் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்போது ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த மக்கள்,

"மிகவும் மோசமான இந்த வீதியினூடாக நாங்கள் பல வருடங்களாக சிரமம் மேற்கொண்டு பயணித்து வருகிறோம்.அந்த வகையில் இந்த வீதியை செப்பனிடுவது மிகவும் முக்கியமானது எனவே முழுமையாக வீதி திருத்த வேலையை மேற்கொள்ளுங்கள் இவ்வாறு அரைகுறையாக வேலைகளை மேற்கொள்ள வேண்டாம் என்றே நாங்கள் கேட்கின்றோம் என தெரிவித்தனர்.

மேலும், ஒரு காற்றாலை அமைக்கும் நிறுவனமானது காற்றாலை அமைக்கும் உபகரணங்களை கனரக வாகனங்களில் குறித்த வீதியால் எடுத்துச் செல்வதற்காகவே இரவு வேளையில் அவசரமாக இந்த வீதி செப்பனிடப்படுவதாகவும் விசனம் தெரிவித்தனர்.

இதன்போது ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி, குறித்த நிறுவனமானது இவ்வீதியைச் செப்பனிடுவதற்கு உரிய முறையில் அனுமதி பெற்ற பின்பே நாங்கள் இந்த வேலையை ஆரம்பித்திருக்கிறோம்.

நாங்கள் அரச அதிகாரிகள் எனவே அரசாங்கத்தின் சட்ட திட்டத்திற்கு அமைவாகவே நாங்கள் செயற்படுகிறோம் மக்கள் எங்களுடன் முரண்படுவதில் எவ்வித பிரயோசனமும் இல்லையெனத் தெரிவித்தார்.

இந்நிலையில் வீதி திருத்த வேலையை உடனடியாக நிறுத்துமாறு மக்கள் வீதியைச் சூழ்ந்து நின்றமையால் வீதி திருத்த வேலை இடைநிறுத்தப்பட்டதுடன் அவ்விடத்திற்கு வந்த பொலிசார் அங்கு நின்ற மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின் மக்கள் இவ்வேலைக்கு இடையூறு ஏற்படுத்துவதாக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யுமாறு குறித்த அதிகாரியிடம் கோரினர்.

இந்நிலையில் குறித்த அதிகாரி, எவ்வித முறைப்பாட்டினையும் வழங்காது அங்கே நடந்த சம்பவத்தைத் தெரிவித்தார்.

இதன்போது அங்கே வருகை தந்த மன்னார் பிரஜைகள் குழு தலைவர் அருட்பணி மார்க்கஸ் அடிகளார் மற்றும் சட்டத்தரணி பா.டெனீஸ்வரன் ஆகியோர் பொலிசாருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட  பின்னர் மக்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர்.

குறித்த காற்றாலை அமைக்கும் நடவடிக்கைக்காக 80 வாகனங்களில் மன்னார் மாவட்டத்திற்கு பொருட்கள் எடுத்து வரப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக பொருட்களை ஏற்றி வந்த 6 வாகனங்கள் மன்னார் மக்களின் எதிர்ப்பின் காரணமாக மன்னார் முருங்கன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.