தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இன்றைய தினம் (08.08)வெள்ளிக்கிழமை நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது ,மன்னார் சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்டு மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயம் வரை சென்று முடிவடைந்தது.
குறித்த நடைபவனியில், மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவி பணிப்பாளர் பூலோகராஜா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மன்னார் மாவட்ட அதிகாரி டியூக் குரூஸ் மற்றும் மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் கழகத்தின் தலைவர், சுபதர்ஷன் தேசிய இளைஞர் சேவைகள் கழக உறுப்பினர்கள், இளைஞர் மற்றும் விளையாட்டு விவகார அமைச்சின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் மொஹமட் சாஜித் மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இது குறித்து தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் பூலோகராஜா தெரிவிக்கையில், மன்னார் தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தினால் " youth connect"அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் சுமார் 143 இளைஞர் கழகங்கள் உருவாக்கப்பட்டு அதிலிருந்து ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஐந்து சம்மேளனங்கள் உருவாக்கப்பட்டு அதன் பிற்பாடு மாவட்ட சம்மேளனமும் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், எதிர்வரும் (12.08 ) சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் நடைபெறவிருக்கும் தேசிய சம்மேளனத் தெரிவில் பங்குபற்றவிருக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக இன்றைய தினம் குறித்த மோட்டார் சைக்கிள் மற்றும் நடைபவனியை முன்னெடுத்துள்ளோம்.
இவ்வாறான இளைஞர் கழகங்களினூடாகப் போதையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்குவதல் மற்றும் நாட்டை வளப்படுத்தக்கூடிய நல்ல திட்டங்களை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வானது இன்றைய தினம் பல மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








